உலகத்தின் மதங்கள் அனைத்துக்கும் அன்பே ஆதாரம். இறைவனை அன்பின் வழியில் அடைவதைத்தான் எல்லா மதங்களும் போதிக்கின்றன. உலகத்து உயிர்கள் அனைத்திலும் நீக்கமற உறைந்திருக்கும் இறையைக் காண வேண்டுமென்றால், முதலில் நம்மை நாம் உணர வேண்டும். அஞ்ஞான இருட்டில் மூழ்கியிருக்கும் நம்மை அதிலிருந்து மீட்டு உள்ளொளி தரும் அணையாச் சுடரே ஆன்மிகம். நம்மை மேம்படுத்தும் ஆன்மிக வழிகளுள் ஒன்றுதான் சூஃபி தத்துவம்.
உலகில் உதித்த இறையியலாளர்கள் அனைவருமே மக்களின் மேன்மைக்காகத் தங்களை ஒப்புக்கொடுத்தவர்கள். நம்மில் ஒருவராக உதிக்கும் அவர்கள் ஏதோவொரு புள்ளியில் மெய்ஞானம் பெற்றுப் பிறருக்குப் போதிக்கும் நிலையை எய்துகிறார்கள். அவர்களது வாழ்க்கையே நமக்கு வழிகாட்டும் கலங்கரை விளக்கமாக அமைகிறது. உலகத்து மக்கள் மெய்ஞானம் பெற்று மேன்மையடைய வழிகாட்டிய 42 சூஃபி ஞானிகள் இந்நூலில் இடம்பெற்றிருக்கிறார்கள். அவர்களது வாழ்க்கையையும் தத்துவத்தையும் எளிய மொழியில் விளக்கியிருக்கிறார் நூல் ஆசிரியர் முகமது ஹுசைன்.
‘இந்து தமிழ் திசை’ நாளிதழின் ‘ஆனந்த ஜோதி’ இணைப்பிதழில் இடம்பெற்ற கட்டுரைகள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. ‘எதை நீ தேடிக்கொண்டிருக்கிறாயோ அது உன்னைத் தேடிக்கொண்டிருக்கிறது’ என்று சொன்ன ஜலாலுதீன் ரூமி தொடங்கி ஒவ்வொரு சூஃபி ஞானியும் நம் மனக் கதவுகளை ஒவ்வொன்றாகத் திறந்துவைக்கிறார்கள். கதவுகள் திறக்க, திறக்க மனம் விசாலமடைகிறது. சூஃபி ஞானி ராபியா சொன்னதைப் போல இன்பமும் துன்பமும் வேறல்ல என்பது புலப்படுகிறது. இரண்டுமே கடவுளின் கொடைதான் என்று உணர்வதே ஆன்ம ஞானம். இதைத்தான் ‘ஆன்மா அன்பால் மட்டுமே தூய்மையடையும்’ என்கிறார் ஞானி ஹபிப் முகமது.
கௌதம புத்தரும் இப்ராஹீம் இப்னு அத்ஹமும் ‘துறவறம்’ என்கிற புள்ளியில் ஒன்றிணைகிறார்கள். பொ.ஆ. (கி.பி) 8ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த இப்ராஹீம், ஆப்கானிஸ்தானின் செல்வாக்கு பெற்ற இளவரசராக இருந்தார். ஓட்டின் மீது ஒட்டகத்தைத் தேடுவது அறிவீனம் என்பதை உணர்ந்த அவர், அரச வாழ்வின் சகல வசதிகளையும் துச்சமெனத் தூக்கியெறிந்தார். மனிதர்கள் வருவதும் போவதுமாக இருக்கும் இந்தப் பூமி, சத்திரம் என்பதை உணர்ந்தார். தான் உணர்ந்த உண்மையை உலகுக்கும் அவர் உணர்த்தினார். 1,700 ஆசிரியர்களின் மூலம் ஆயிரக்கணக்கான நூல்களைக் கற்றறிந்த ஷகீக் பல்கீ, தான் கற்றவை அனைத்துமே ஏற்கெனவே யாரோ எழுதியளித்த அறிவுப் பிச்சை என்பதை உணர்ந்த நொடியில் ஞானம் பெற்றார். அறிவும் செல்வமும் பிறருக்குக் கொடுப்பதற்கே என்பதை உணர்ந்து முற்றும் துறந்து நாடோடியாகத் திரிந்தார்.